Tuesday, April 2, 2013

சில குருவிகளின் சித்திரங்களும்... சில வியாபாரிகளும்...

அப்பொழுது எனக்கு  14 வயது இருக்கும். தாத்தா உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். நான் இருக்கும் விழுப்புரத்திலிருந்து 37 கி.மீ தொலைவில் உள்ள செஞ்சியில் தாத்தா வசித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவரோடு என் பாட்டியும் என்னுடைய தங்கையும் (8 வயது) மட்டுமே இருந்தனர். அவசரமான அந்த நேரத்தில் சில உதவிகள் கிடைத்திருந்தால் இன்னும் கொஞ்ச நாள் தாத்தா வாழ்ந்திருப்பார். பொருளாதார ரீதியாக எந்த உதவியும் செய்ய இயலாத ஒரு நிலையில்தான் நாங்களும் இருந்தோம். அந்த இக்கட்டான சூழலில் ஒரு பயலும் கிட்ட வரல. ஆனால் அவருடைய கருமாதி (காரிய சடங்கு) வச்சிருந்த அன்னைக்கு முக்கியமான அப்பாடக்கர்களெல்லாம் ஆஜராகி பாசத்தை பொழிந்துகொண்டிருந்தனர்.  தாத்தா தன் வாழ்நாள் முழுதும் உழைத்து, குருவி சேர்ப்பதைப்போல் சேமித்து ஒரு வீடு கட்டி அந்த வீட்டில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார். இப்ப புரிஞ்சிருக்குமே இந்த பாசக்கார பயலுகளின் வருகைக்கான காரணம். அந்த நாட்கள் என் மனதில் ஏற்படுத்திய சித்திரங்கள் இன்றைக்கும் நினைவில் உள்ளன. தமிழ் திரை உலகத்தினரின் உண்ணாவிரத போராட்ட நிகழ்வை இன்று இணையத்தில் பார்த்தேன். ஏனோ அந்த பழைய நாட்களின் சித்திரங்கள் மீண்டும் வந்து போனது. இதை லைவ் டெலிகேஸ்ட்  செய்து கொண்டிருக்கும் அனைத்து மீடியாக்களுக்கும் குறிப்பாக எனக்கு இதை காண வாய்ப்பை ஏற்படுத்தி தந்த Vikatan EMagazine க்கும் என மனமார்ந்த நன்றிகள். 

இந்த உலகம் இயங்க வேண்டிய திசையினை வியாபாரிகளே தீர்மானிக்கிறார்கள். போர்கருவிகள், நோய், மருந்து, ஊடகம் என வியாபார பண்டங்கள் வெவ்வேறானதாக இருப்பினும் நோக்கம் ஒன்றுதான்.  கருமாதியைகூட காசாக்கும் அல்பதனங்களை பற்றியெல்லாம் லாபவெறி பொருட்படுத்துவதில்லை. 

சென்றவார 'நீயா நானா' பார்த்தேன். தலைப்பு கௌரவ கொலைகள் பற்றியது. நிகழ்ச்சியில் பேசிய பெரும்பான்மையான சகோதர சகோதரிகளின் முகங்கள் என் ஆயுள் முழுதும் நினைவிலிருக்கக்கூடிய சித்திரங்களை உருவாக்கி விட்டது. எத்தனை விதமான கொடுமைகள். சாதியங்கள் அப்பாவி மக்களின் மீது இழைக்கும் அநீதிகளும் கொடூரங்களும் நம் கற்பனைக்கும் எட்டாதவதையில்  இருக்கின்றன. குறிப்பாக, கைக்குழந்தையுடன் வந்திருந்த ஒரு சகோதரி பேசிக்கொண்டிருந்த போது நான் பீறிட்டு அழுது கொண்டிருந்தேன். அவருடைய அப்பாவித்தனமான அந்த குரல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே  இருக்கிறது. மூன்று நாட்கள் முடிந்துவிட்ட நிலையிலும் அந்த சகோதரியின் முகம் நினைவுக்கு வரும்போதெல்லாம் கூடவே சேர்ந்து வரும் கண்ணீரை கட்டுப்படுத்தவே இயலவில்லை. 

ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கும் அந்த சகோதரி பி.எஸ்.சி வேதியியல் படித்திருக்கும் ஒரு தலித் சகோதரரை நேசிக்கிறார்.  வீட்டிற்கு தெரிந்து உடனடியாக கட்டாய திருமணம் நடத்தி வைக்க முயற்சிகள் நடைபெறுகிறது. துணிச்சலான அச்சகோதரி, வீட்டாரிடமிருந்து தப்பி தன் காதலனுடன் திருமணம் செய்துகொண்டு இருவரும் சென்னையில் குடியேறுகிறார்கள். சென்னை மாநகரம் சாதியத்தை விட கொடுமையான அநீதிகளை அவர்களுக்கு இழைக்கிறது. வெறும் 5000 ரூபாய் ஊதியத்தில் 2000 ரூபாய் வாடகை கொடுத்து மீதி 3000 ரூபாயில் குடும்பம் நடத்துகிறார்கள்.  அந்த அற்புத காதலன், தன் மனைவி இரண்டு வேளை சாப்பிடுவதற்காக தன்னுடைய ஒரு வேளை உணவையும் தியாகம் செய்து பட்டினி கிடந்திருக்கிறார்.  ஆனால் அந்த சகோதரியோ, தான் இரண்டு வேளை உண்டால் தன் கணவருக்கு உணவு இருக்காது என கருதி ஒரு வேளை மட்டுமே உண்கிறார். இப்படியே ஒருவருடம் கடந்து போக, வறுமையின் பெயரால் அவர்களை மீண்டும் தன் சொந்த ஊருக்கே துரத்திஅடிக்கின்றது சென்னை மாநகரம்.  வாழ்க்கையின் மீதும் தாம் வாழ்ந்த இடத்தின் மீதும் மாபெரும் நம்பிக்கையுடன் மீண்டும் சொந்த ஊர் திரும்புகிறார்கள். ஆதிக்க சாதி அந்த சகோதரரை கொன்று போட்டு சாதிய ஆணவத்தை நிலை நாட்டுகிறது. தனக்கான அன்றாட உணவையே தியாகம் செய்து அவளுக்காக வாழ்ந்த அந்த அன்புக்கணவருடைய இழப்பின் வலியை உடைந்த குரலில் அச்சகோதரி விவரித்த விதம் மனதை கணக்கச்செய்தது. எண்ணற்ற கேள்விகளை எழுப்பியவாறும், இதுவரை நான் வாழ்ந்த இனி வாழப்போகும் ஒட்டு மொத்த வாழ்க்கையினை பரிகாசம் செய்தவாறும் அந்த குரல் என் மனசாட்சியோடு தொடர்ச்சியாக  உரையாடிக்கொண்டே உள்ளது.  நிகழ்ச்சி முடியும் போது, நடந்த அநீதிகளை பற்றிய எந்த விவரமும் அறியாமல் உறங்கிக்கொண்டிருந்த அந்த குழந்தையை  சகோதரியிடம் இருந்து வாங்கி தன் தோளில் போட்டுக்கொண்டார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.  அவளின் கைகளை பற்றிக் கொண்டு ஆறுதல் சொல்லும் நாகரீக நிலையை நம் சமூகம் இன்னும் அடையவில்லை. ஆதலால் பாலாஜி சக்திவேல் குழந்தையை பற்றிக்கொண்டார். நான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். 

அந்த ஆதிக்க சாதியை எதிர்த்து அதே ஊரில் தன் குழந்தையை ஒரு தலித் அடையாளத்துடன் வளர்த்துக் கொண்டிருக்கும் அச்சகோதரியின் போராட்ட குணம் நிச்சயம் அந்த குழந்தையை காக்கும்.

மாநகர ரயில்களில் கர்சீப் விற்று பிழைத்துவரும் ஒரு கண்தெரியாத தலித் சகோதரனுக்கும் அவரை காதலித்து மணம்புரிந்த சகோதரிக்கும் இழைக்கப்பட்ட அநீதிகள் இதைக்காட்டிலும் கொடூரமானவையாக இருந்தன. கௌரவக் கொலைகள் இங்கு வெளிப்படையாக நிகழ்ந்து வருவது நாம் நன்கு அறிந்த ஒன்றாக இருப்பினும், பாதிப்படைந்தவர்களின் நேரடி அனுபங்கள் நமக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சிகளை தாங்கமுடியவில்லை.
கல்யானி ஐயா, கவின் மலர், போன்றவர்கள் மிகக்குறைவாகவே பேச வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் அவர்கள் பேசியது சற்று ஆறுதலாக இருந்தது. வெகு ஜன ஊடகங்கள் நம் சிந்தனையாளர்களுக்கு இந்த அளவு முக்கியம் கொடுப்பதே அரிதான ஒன்றுதான். ஆனால் கவின் மலருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு அறிவு ஜீவி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் (என்பதை விட கிடைக்காதபோதும் என்பதுதான் சரியாக இருக்கும்) தன் திறமையை நிறுவிக்கொண்டிருந்தார். அவர் தெரிந்து வைத்திருக்கும் தகவல்களை இந்த தலைப்போடு தொட்ர்புபடுத்தி பேச முயற்சித்துக்கொண்டிருந்தார். அவர் பெயர் நினைவில் இல்லை.ஆன்டனிக்கு தெரிஞ்சவரா இருப்பாரோ! 

சரி விஷயத்திற்கு வருவோம். கௌரவ கொலைகள் மீதும் சாதிய அரசியல் மீதும் விஜய் டிவிக்கும், கோபி நாத்துக்கும் இருக்கும் அக்கரைக்கு தலை வணங்க்குகிறேன். குறிப்பாக நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே, விஜய் டிவிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜுக்கு (''என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் தமிழால், பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் ''  என்கிற வரிகளுக்கு  உண்மை சேர்க்கும் விதமாக) விஜய் நிறுவனம் செய்யும் கைமாறுதான் இந்த நிகழ்ச்சி என்பதை  தெளிவாக குறிப்பிடாமல் இருந்தாலும், குறிப்பால் உணர்த்தும் கோபி-யின் நேர்மை பாராட்டுக்குரியது. நிகழ்ச்சியின் முடிவில் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் விதமும் அழகு. கௌரவம் படத்தின் ட்ரெயிலரை பார்க்கும்போது, இந்த பாழாய்ப்போன சாதியத்தை சாடுவதற்காக பிரகாஷ்ராஜும், ராதாமோகனும் தேர்ந்தெடுத்துகொண்ட கதைக்களனும், கதை மாந்தர்களும் நிச்சயம் நியாயம் செய்வார்கள் என நம்புகிறேன்.  நீங்களும் நம்பனும்!.

தருமபுரி சம்பவம் நடந்தபோது ஏன் பிரகாஷ்ராஜ் போன்ற தோழர்கள் குரல் கொடுக்கவில்லை என நான் அடிக்கடி யோசித்ததுண்டு. ஆனால், அந்த சமயத்தில் அவர் நடித்து முடித்த படங்களுக்கு டப்பிங் குரல் கொடுப்பதற்கான பணியில் பிஸியாக இருந்திருப்பார் என இப்போது புரிகிறது. கௌரவம் படத்தின் கதை லீக் ஆகி விட கூடாது என்கிற காரணமாக கூட இருக்கலாம். ஆனால் இன்று, அந்த ஒட்டுமொத்த கோபத்தையும் திரட்டி கௌரவம் என்கிற படத்தின் மூலம் குரல கொடுக்க வந்திருக்கிறார். அந்த நம்பிக்கை இப்படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் முகங்களை பார்க்கும்போது சற்று அதிகரிக்கின்றது என்றால் மிகையில்லை. குறிப்பாக பிரகாஷ்ராஜ்-ஜின் நடிப்பும் அவருடைய் மேக்க அப் செய்யப்பட்டிருக்கும் விதமும் நம் நம்பிக்கை கீற்றுக்கான காரணமாக சொல்லலாம். இந்த இடத்தில் மீண்டும் கட்டுரையின் துவக்கத்திற்கு நாம் சென்றுவிடுவது சிறப்பு. 

சமூக அநீதிகள் நமக்கு தரும் அதிர்ச்சிகளை விட அதை வைத்து காசு பார்க்கும் வியாபார நுட்பம்தான் நம் இன்றைய சமூதத்திற்கு மிகவும் அவசியமானதாக கருதுகின்றேன். நாம் நம்  குழந்தைகளுக்கு அம்பானியையும்,  பில்கேட்ஸையும் ரோல் மாடல்களாக அடையளப்படுத்தி, அவர்களுடைய தொழில் நுட்பங்களை (பிசினஸ் டெக்னிக்) வாழ்க்கையின் தாரக மந்திரங்களாக கற்பித்து, 'மங்காத்தா', 'நான்' போன்ற தன்னம்பிக்கை அளிக்கும் திரைப்படங்களையும் காண்பித்து வளரப்போம்!

அண்மைய இடுகைகள்