Thursday, July 8, 2010

அரசியல் அங்கத சினிமாவின் துவக்கம் – நண்பர் ஜே.பிக்கு ஓர் எதிர்வினை.

இந்திய கௌபாய் உலகம் இந்திய கௌபாய் சினிமா என்கிற கட்டுரையின் மூலம் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தை பற்றி என்னை ஒரு கட்டுரை எழுத தூண்டிய என் அருமை நண்பர் ஜே.பி, அக்கட்டுரைக்கு எழுதிய பின்னூட்டத்திற்கான எதிர்வினையே இந்தப் பதிவு. எதிர்வினை என்பது நண்பர்களுக்கு மட்டுமே போகிறபோக்கில் எளிதாக எழுதக்கூடியது என்கிற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். இனி ஜே.பியும் நானும்.

முதலில் ஜே.பி-யின் பின்னூட்டம்


/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

Jayaprakashvel said...

சங்கர்


நீங்கள் இந்தப் படத்தை மிகவும் பொறுப்பாகப் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்கிற அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அங்கதத் தொனி போன்றவை ஒத்துக் கொள்ளக் கூடியவை தான். ஆனாலும் தீவிரமான கெளபாய் பட ரசிகனான எனக்கு இந்தப் படம் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. உங்களின் இந்தப் பதிவு குறித்து நேரில் சந்திக்கும் போது நிறைய பேசுவோம்.ஆனால் அது பின்வருவனவற்றின் விரிவாகத்தான் இருக்கும் அமேரிக்க எதிர்ப்பு என்பதை சிம்புதேவன் எங்காவது பேட்டிகளில் சொல்லி இருக்கிறாரா? சொல்லி இருந்தால் சரி. இல்லாவிட்டால் இதுவும் ஒரு வியாபார தந்திரமே. குட்டி ரேவதி குறித்த வசனத்திற்கு முகம் காட்ட மறுத்த ஓடி ஒளிந்த எஸ். ராமகிருஷ்ணனின் நேர்மைக்குறைவு- மாடு செத்தா மனுசன் தின்னான் என்ற வரிகளை மாற்ற மறுத்த இயக்குனரின் (பெயர் தெரியவில்லை) நேர்மை இரண்டும் இங்கே எனக்கு நினைவுக்கு வருகிறது.


அப்புறம் அங்கதச்சுவை. இது முதல் படமா என்பது எனக்குத்தெரியவில்லை. அப்படி இருந்தால் மிக மகிழ்ச்சி.


ஆனால் எந்த சூழ்னிலையிலும் சிம்புதேவனை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மிகவும் மதிக்கப்படவேண்டிய இயக்குனர்.
மைசூர் மகாராஜா அரண்மனையையும் திப்புவின் சிதைந்த கோட்டைகளையும் ஒரே நாளில் பார்க்க நேர்ந்த எனக்கு தோன்றிய அதே உணர்வு உங்களுக்கும் தோன்றி இருப்பது மிகவும் மகிழ்ச்சி. அதை பற்றி எழுத வேண்டும் என நினைப்பு ரொம்ப நாளாக உண்டு. கடந்த மாதம் மீண்டுமொரு முறை மைசூரு சென்ற போதும் உங்களின் கட்டுரைக்குப் பின்னாலும் அது மிகவும் தீவிரம் கொண்டுள்ளது. விரைவில் எழுத வேண்டும்.

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

அன்புள்ள ஜே.பி

அவதார் பற்றி ஜேம்ஸ் காம்ரன் டைம் பத்திரிக்கைக்கு அளித்திருக்கும் நேர்காணல் (http://www.time.com/time/magazine/article/0,9171,1969722,00.html) பற்றி ஒரு வலைப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். அந்த நேர்காணலில் Is Avatar a Native American story? என்கிற கேள்விக்கு, இந்தியாவில் பாக்ஸைட் சுரங்கத்திற்காக மலைவாழ்மக்கள் அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்படுவதையும், பிரேசிலில் காடுகள் அழிக்கப்படுவதையும், சீனாவில் அணை கட்டுவதற்காக மக்களை இடம்பெயரச்செய்வதையும் குறிப்பிட்டு இதுபோன்று உலகத்தின் வெவ்வேறு பகுதியைச்சார்ந்த அனைவருக்கும் பொதுவான ஒரு அரசியல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாக வெளிப்படையாக கூறுகின்றார். இது அமெரிக்காவில் சாத்தியப்படலாம். ஆனால் இங்கு இது போன்ற காட்சிகள் தணிக்கைத்துறையினை தாண்டிவருவதே அரிது. வியாபாரம் செய்யும் நோக்கத்தில் படம் எடுக்க சிம்புத்தேவனுக்கு இதைவிட எளிமையான கதைக்களம் கண்டிப்பாக இருக்கக்கூடும். எஸ்.ரா-குட்டிரேவதி பிரச்சனை வேறு. இதை அதனுடன் ஒப்பிடத்தேவை இல்லை. இதனை நேர்மை சம்மந்தபட்ட அம்சமாக பார்க்கவேண்டாம் ஜே.பி. ஒரு படைப்பாளிக்கு அந்த சமூகம் வழங்கியிருக்கும் சுதந்திரமும், அங்கீகாரமுமே காரணம். ஜேம்ஸ் கேம்ரனுக்கு அமெரிக்காவில் இருக்கும் சுதந்திரமும், அங்கிகாரமும் இங்கு எந்த இயக்குநருக்குமே இல்லை. அதற்கு காரணம் கதாநாயகன்களை முன்னிலைப்படுத்தும் நம் வெகுஜன சினிமா ரசனைதான். என்று ஒரு தமிழ்சினிமா இயக்குநர், ஜேம்ஸ் கேம்ரனுக்கு கிடைத்திருக்கும் படைப்பு சுதந்திரத்துடன் படம் எடுக்க இயலுமோ... அதுவரை தன் படைப்புகளில் மட்டுமாவது குரல் கொடுத்துவரும் படைப்பாளிகளை கொண்டாடலாம்.

மேலும், நேர்காணல் ஒன்றில் தனியாக விளக்கம் கொடுக்கும் அளவுக்கு இதில் ஏதும் மறைமுக அரசியல் இருப்பதாகபடவில்லை ஜே.பி. அனைத்தும் வெளிப்படையான பகடிகளே. சில காட்சிகள் முதல் வார திரையிடலுக்குப் பிறகு வெட்டப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகின்றது. 123 ஒப்பந்தத்தின் படி நாம் குசு (மல வாயு) விடுவதாக இருந்தாலும் அமெரிக்காவிடம் அனுமதி பெற்ற பிறகே சாத்தியம் என சொல்லும் ஒரு காட்சியினை விட , ஒரு நேர்காணல் என்ன பெரிதாக புரியவைத்துவிட போகின்றது ஜே.பி. (படம் வெளியாகி 2வது வாரத்திலிருந்து இந்த காட்சி வெட்டப்பட்டுவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். நான் முதல் வாரத்திலேயே பார்த்துவிட்டதில் பெரும் மகிழ்ச்சி)

சிம்புத்தேவன் தன்னுடைய நேர்காணலில் நாம் விவாதிக்கும் அரசியலை பேசி இருந்தால் அவரை வைத்து அடுத்த திரைப்படம் எடுக்க த.மு.எ.ச கூட முன்வராது என்பதுதான் உண்மை. நாம் பதிவுலகில் எழுதுவதற்கே வீட்டுக்கு ஆட்டோ வருவதாக சொல்லப்படும் இந்தியா என்கிற ஜனநாயக நாட்டில் வாழ்வதால் சில நிபந்தனைகளுக்கு (for survival) உட்பட்டே நம் குரலை உயர்த்திப்பிடிக்க வேண்டியுள்ளது.

மாடு செத்தா மனுசன் தின்னான் என்ற வரிகளை மாற்ற மறுத்த இயக்குனர் பற்றி இப்பொழுதான் கேள்விபடுகிறேன் ஜே.பி. அது ஒரு சாதாரண வியாபார சினிமாவில் இடம்பெற்ற பாடல் என்றே நினைத்து வந்தேன். அதில் என்ன பிரச்சனை என்பதை முடிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அப்புறம் அங்கதச்சுவை. இது முதல் படமா என்பது எனக்குத்தெரியவில்லை. அப்படி இருந்தால் மிக மகிழ்ச்சி.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

தமிழில் அரசியல் அங்கத சினிமாக்களின் துவக்கம் என்றே குறிப்பிட்டு இருக்கின்றேன் ஜே.பி. வெறும் அங்கதசுவை என குறிப்பிடவில்லை. மேலும், இது வெறும் மிகை உணர்ச்சியினால் எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல. ஏற்கனவே அங்கதச்சுவையுடன் படங்கள் வந்திருக்கலாம். ஆனால் இவ்வளவு ஆழமான அரசியலை வெளிப்படையாக கிண்டல் அடித்திருக்கும் காட்சி இந்த படத்தின் மூலமே எனக்கு அறிமுகம். இது போன்ற அம்சங்களில் துவக்கம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஆரம்பிக்கின்றது என அருதியிட்டு யாராலும் கூற இயலாது. பல தொடர்ச்சியான முயற்சிகளில் மிகவும் பலமாக ஒலித்த ஓரிரு குரல்களாக தோன்றியதால்தான் துவக்கம் என குறிப்பிட்டுள்ளேன்.

ஒரு நல்ல விவாதத்தினை உருவாக்குவதன் முயற்சியாகவே இந்த எதிர்வினை என்கிற கருவி . பொதுவாக உங்களுடன் விவாதிப்பதிக்கும் தருணங்கள் எனக்கு மிகவும் அலாதியானவை. அதை இந்த பொதுவெளியில் செய்தால் எனக்கு மேலும் மகிழ்ச்சி. உங்களை உங்கள் நேரம் அனுமதிக்கும்பட்சத்தில் விவாதத்தினை தொடர்வோம் ஜே.பி.


//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
மைசூர் மகாராஜா அரண்மனையையும் திப்புவின் சிதைந்த கோட்டைகளையும் ஒரே நாளில் பார்க்க நேர்ந்த எனக்கு தோன்றிய அதே உணர்வு உங்களுக்கும் தோன்றி இருப்பது மிகவும் மகிழ்ச்சி. அதை பற்றி எழுத வேண்டும் என நினைப்பு ரொம்ப நாளாக உண்டு. கடந்த மாதம் மீண்டுமொரு முறை மைசூரு சென்ற போதும் உங்களின் கட்டுரைக்குப் பின்னாலும் அது மிகவும் தீவிரம் கொண்டுள்ளது. விரைவில் எழுத வேண்டும்.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

நானும் ஒரே நாளில் பார்த்தேன் ஜே.பி. திப்பு வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்ட இடத்தில் வெகு நேரம் அமர்ந்திருந்தேன். உண்மையில் மிகவும் வேதனையாக உணர்ந்தேன்.

நீங்கள் எழுதிய பதிவு ஒன்றிற்கு நான் எழுத முயன்ற பின்னூட்டம் ஒரு பதிவாக உருமாற்றம் பெற்றதுடன் உங்களை இன்னொரு பதிவு எழுதச் சொல்லி நினைவூட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.

8 comments:

Jayaprakashvel said...

சங்கர்
ரொம்ப நிறைய எழுத முடியாத நிலை. என்றாலும் உங்கள் பதிவின் நோக்கம் எழுதத் தூண்டுகிறது. எந்த நோக்கமானாலும் சமூகம் பற்றிய சமகால அரசியல் பற்றிய விமர்சனங்கள் தாங்கி வரும் படைப்புகளை வரவேற்கவே செய்ய வேண்டும். மணிரத்னம் கூட அவருடைய பார்வையில் சமகால அரசியலை அவர் படங்களில் அலசுகிறார். ஆனால் நான் மணியையும் சிம்புதேவனையும் ஒப்பிடவில்லை. நான் சிம்புதேவனின் பேட்டி பற்றி எழுதியதற்கு காரணம் படம் ஒரு இந்திய கெளபாய் படமாகத்தான் விளம்பரப்படுத்தப்பட்டது. தொலைக்காட்சிகளில் சிம்புதேவனும் அதை முன்னிறுத்தி லாரன்ஸை முன்னிறுத்தி செட்டுகளை முன்னிறுத்திதான் பேசினார். நான் இரண்டு நேர்காணல்களை பார்த்தேன். படம் வந்த பிறகு நான் அவரின் நேர்காணல்களை படிக்கவோ பார்க்கவோ இல்லை. எஸ் ராமகிருஷ்னன் குட்டி ரேவதி சர்ச்சையில் எஸ் ராம்கி என்ற தனிப்பட்ட மனிதன் மீதான மரியாதை குறைந்தது. நீங்கல் படத்தில் கண்டடைந்த அரசிஅயல் மற்றும் அங்கதத்தை சிம்பு தேவன் முன்னிறுத்த வேண்டியது அவசியம் என்று நான் நினைப்பதற்கு மற்றுமொரு தமிழ்ப்படைப்பாளியை இங்கே அழைத்து வருகிறேன். எஸ். பி. ஜனனாதன். வணிக சினிமாவுக்கான அம்சங்களுடன் வந்த அவரது ஈ என்ற படம் விமர்சித்த அரசியல் சம்காலத்து சர்வதேச அரசியல் தான். அது மிகவும் நேரடியாக விமர்சனம் செய்த படம். அந்த படத்தின் கடிஅசியில் நெல்லை மணி பேசும் வசனங்கள் சுலபமாப சென்சாரால் தடை செய்யப்பட்டிருக்க வேண்டிய அமேரிக்காவே பயப்பட வேண்டிய வசனங்கள். நான் பேராண்மை படத்தை பெரிதாக சிலாகித்து எழுதி இருந்தாலும் ஈ படம் நான் மிகவும் அதிசயித்த படம். சமகால அரசியலை சமரசம் இல்லாமல் விமர்சித்த எம். ஆர். ராதாவை என்ன பன்ன முடிந்தது இவர்களால்?

Jayaprakashvel said...

அமெரிக்க எதிர்ப்பு என்பது என்னைப்பொறுத்த வரை ஒரு வெகுஜன ரசனைக்கு வந்து விட்டது. அதை சிம்பு தேவன் உபயோகித்துக்கொண்டாரோ என்ற மயக்கம் எனக்கு உண்டு. யாரையும் சந்தேகப்படுவது எனது இயல்பு. அவர்கள் அப்படி இல்லாமல் இருந்தால் மகிழும் முதல் ஆளும் நான் தான். உண்மையில் வெறும் அமெரிக்க எதிர்ப்பும் விமர்சனங்களும் ஒரு வகை திசை திருப்பல்கள் தான். பிரச்சனைகளின் மையம் அமெரிக்கா அல்ல. அமெரிக்கா அந்த பிரச்சனைகளை செயல்படுத்தும் கைகள் அவ்வளவே. என்றாலும் தமிழ்ப்படங்களில் இந்தளவாவது காட்டியிருப்பது மகிழ்ச்சிதான். ஆனாலும் அதன் நோக்கம் குறித்த என் சந்தேகங்கள் தீரவில்லை. சிம்புதேவன் ஆனந்த விகடனில் வேலை பார்த்தவர் என்று நினைவு. அதுகூட இப்போது செம்மொழி மானாட்டை படு கேவலாமக விமர்சித்து எழுதி இருக்கிறது. அந்த ஒரு கட்டுரையை பாராட்டலாமே தவிர அந்தப் பத்திரிக்கையை முற்போக்கானதாக கருத முடியாது. அது என்ன நோக்கத்துக்காக அப்படி எழுதுகிரது என்பதையும் யோசிக்க வேண்டும். அது போலத்தான் சிம்புதேவன் மீதான என் சந்தேகமும். இதற்கும் அவர் அங்கே வேலை பாத்ததுக்கும் சம்பந்தம் இல்லை. ஆயிரத்தில் ஒருவன் ஈழப்பிரச்சனையை மையப்படுத்துகிரது என்பதற்காக செல்வராகவனை ஈழ அதரவாளாக அடையாலம் கொள்ள முடியாது. சிம்பு தேவன் இந்தப்படத்திலும் இதற்கு முன்னாலும் எடுத்துக்கொண்ட எந்தப் பிரச்சனையும் ஆவ்ருக்கு நம்ம ஊரில் எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத பொதுவான தளத்தில் பேசப்படுபவைதான். ஆனால் எஸ் பி ஜன நாதனின் அரசியல் தத்துவ ரீதியாக ஆட்சியாளர்களை மிகவும் பயங்கொள்ள வைக்கக்கூடியது. அவர் தான் பயப்ப்பட வேண்டுமே தவிர சிம்பு தேவன் அல்ல. மேலாக தீ என்றொரு படம் இப்போது வந்ததே? நினைவில் இருக்குமாதெரியவில்லை. சன் பிக்சர்ச் படம். அவர்கள் குட்ம்பச்சண்டை உச்சத்தில் இருந்த போது வந்த படம். அதை செய்யத்தான் தைரியம் தேவை. ஓட்டுக்கு பணம் கொடுத்து பதவிக்கு வந்தால் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது. காவல்துறை சங்கம் என மிக லோக்கலான அரசியலை அந்தப் படம் கொண்டிருந்தது. ஆனால் அது வெரும் குடும்பப்பகையின் விளைவே. இந்த மட்டில் சிம்புதேவனின் அமேரிக்க எதிர்ப்பும் காசு பண்ணும் ஒரு வழியே என்று நான் சந்தேகிக்கிறேன். என் சந்தேகம் பொய்த்துப்போக வேண்டும் எனவும் ஆசைப்படுகிறேன்.

Jayaprakashvel said...

மிகவும் அதிகப்படி என்றாலும் படம் பார்த்த பிறகு எனக்கு அரட்டை அரங்கம் பார்த்த உணர்வுதான் வந்தது. நண்பர் முத்து இந்தப் படத்தை பார்த்த நாளில் இருந்து உசா புரம் அணுஒப்பந்தம் என்பது பற்றியெல்லாம் நிறைய பாராட்டினார். சிங்கம் லாரன்ஸின் இறக்கும் தருவாயில் வரும் வசனங்கல் ஈழத்தில் பிரபாகரன் பேச நேர்ந்த வசனாமாக இருக்கலாம் எனவும் சொன்னார். ஒரு துரோகிக்கு டக்ளாண்டி என்று டக்ளஸ் தேவானந்தாவை நினைவூட்டும் பெயர், பொங்கு தமிழர்க்கு இன்னல் நேர்ந்தால் போன்ற வசனங்கள் எல்லாம் ஈழக்கொடுமைகளை பிரதிபலித்தவை என்று மிகச்சாதாரணமாக உணர்ந்து கொள்ளலாம். இன்னும் சொல்லபோனால் ஆயிரத்தில் ஒருவன் படம் ஈழ யுத்தத்தில் சோனியாவின் பங்கை நினைவூட்டுகிர விதமாக ரீமாவின் பாத்திரம் என்றும் அவர் சொன்னார். எனக்கும் படத்தின் பல்வேறு காட்சிகள் அதையே உறுதிப்படுத்தின. என்றாலும் சோழர்களின் மரியாதை சம்பத்தப்பட்ட சர்ச்சையில் அந்தப் படம் நுழைந்த போது செல்வராகவன் இது பற்றி விளக்காமல் ஒரு கற்பனையே என்ற அளவில் நின்று கொண்டார். உண்மை நோக்கம் அதுவென்றால் நேர்மையாக மக்களிடம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது. சிம்பு தேவன் எஸ் பி ஜனனாதன் போல அதைப்பற்றி நேரடியாக சொல்லி இருந்தால் அது மகிழ்ச்சி.ஆனால் அப்படி இல்லாமல் இது ஒரு கெளபாய் படம் என்று சொல்லி வருபவரின் படத்தை அரசியல் படம் என்று நாம் மகிழ்ந்து கொள்ளலாமே தவிர ஒத்துக் கொள்ள முடியாது. (எஸ் பி ஜனனாதனும் தற்சமயம் அரசுசாரா நிறுவனங்களின் கைப்பாவையாக மாறி விட்டார் என்ற தகவலும் உலவுகிறது. அதற்கு சான்றளிக்கும் காட்சிகலும் பேராண்மையில் உண்டு.). இந்த அரசியல் எல்லாம் மிக நுணுக்கமானவை சங்கர். NGO-களுக்கு நமது மனித உரிமைகளின் மேல் என்ன அக்கறை? கிராமத்து மக்கலை ஒன்று திரட்டி குளம் வெட்ட வேண்டிய தேவை அவர்களுக்கென்ன? ரொம்ப விரிவாகப் பேச வேண்டியவை. போக இங்கே சம்பந்தமில்லாதவை.

Jayaprakashvel said...

அதுபோக மாடுசெத்தான் மனுசன் திண்னான் என்ற வரிகள் செத்த மாடுகளை திண்பவர்கள் என்று காலங்காலமாக கேவலப்படுத்தப் பட்டு வரும் தாழ்த்தப் பட்ட மக்களை மேலும் கேவலப்படுத்துகிறது என்று சில அமைப்புகள் அந்த வரியை மாற்றச்சொல்லி போராட்டம் செய்தன. கண்டனம் தெரிவித்தன. இசையமப்பாளர் இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் (இதுவும் இயக்குனர் என்றே நினைக்கிறேன்.) இவர்கள் அந்தப் பாடல் வரிகள் அவ்வாறான நோக்கத்தில் எழுதப்படவில்லை எனவே நீக்கத்தேவை இல்லை என்று தெரிவித்தனர். சம்பவம் மட்டும் நினைவில் உள்ளது. ஆட்கள் நினைவில் இல்லை.



நேரிலோ போனிலோ விரிவாக பேசுவோம். என்றாலும் எழுத தூண்டிய உங்கள் பதிவுக்கு நன்றி. முடிந்தால் இந்த விவாதங்களை தொடர்ந்து இருவரும் பதிவு செய்வோம்.

ராம்ஜி_யாஹூ said...

இரும்புகோட்டை முரட்டு சிங்கம் படத்தில் லாரன்சுக்கு பதில் வேறு யாரும் கதாநாயகனாக நடித்து இருந்தால், நான் பார்த்து இருப்பேன்
என்னால் லாரன்சை ஒரு கௌபாயாக நினைத்து பார்க்கவே முடிய வில்லை

நளினி சங்கர் said...

@ராம்ஜி_யாஹூி

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்-தமிழில் அங்கத சினிமாவின் துவக்கம் என்கிற என் முந்தைய கட்டுரையினை வாசித்தீர்களா ராம்ஜி? ஏற்கனவே லாரன்ஸ்-ன் நடிப்பை சிலாகித்து அக்கட்டுரையில் எழுதியாகிவிட்டது. அதை படித்துவிட்டு பின்னூட்டம் இடவும். தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

நளினி சங்கர் said...

@ ஜே.பி

////சங்கர் ரொம்ப நிறைய எழுத முடியாத நிலை////

இங்கயும் அதேதான் ஜெ.பி. ஏதோ ஒரு உத்வேகத்துல இரண்டு பதிவு போட்டாச்சு. ஆனால் உங்க அளவுக்கு வேகமா நம்மால எழுத முடியல. விவாதத்தினை நிறுத்தவும் மனசு வரல. நிச்சயம் தொடர வேண்டும். ஆனால் கொஞ்சம் கால அவகாசம் தேவை. முயற்சிக்கிறேன்.

Jayaprakashvel said...

Same blood. We shall continue.

அண்மைய இடுகைகள்