Monday, May 24, 2010

மருத்துவமனைகள் இரக்கமற்றவை

தையல்களாலும் பிளாஸ்திரிகளாலும்
மறைந்து போயிருக்கும் முகங்கள்

சிறிது நேரத்தில் நிகழப்போகின்ற
தன் அன்புக்குரியவர்களின்
நிரந்தரப் பிரிவை ஏற்க மறுத்து
சுவரையே வெறித்துக்கொண்டிருப்பவர்களின் பெருமூச்சுக்கள்

பழுப்பு நிற சால்வை ஒன்றினால் சுற்றப்பட்ட
காய்ச்சலுற்ற குழந்தையுடன்
நீண்ட நேரமாக மருத்துவரின் வருகைக்காக
காத்திருக்கும் ஒருவளின் படபடப்புகள்

வலிகளைப் பொறுக்கமுடியாத முனகல்கள்
முனகல்களைப் பொறுக்கமுடியாத வலிகள்

என, இவை எவற்றிற்கும்
எந்தச் சலனமும் அடையாத
மருத்துவமனைகள் இரக்கமற்றவை.

Wednesday, May 5, 2010

அவனுடைய 43-வது பிறந்தநாளுக்கு பிறகு

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும்
அவன் அம்மாவின் கடிதங்களின் வருகை
குறைந்து போயிருந்தது.

எப்பொழுதாவது உணவகங்களில் கை கழுவும்போதோ
முடிதிருத்தத்தின்போதோ
பார்க்க நேரும் கண்ணாடிகள் மீது
அவனுக்கு குற்றச்சாட்டுக்கள் உண்டு.
அவைகள் அவனுடைய முகத்திற்கு பதிலாக
வேறு ஏதோ ஒரு முகத்தை காண்பிக்கின்றதாம்.

இப்போதெல்லாம்
எதிர்ப்படும் எந்த மார்பகங்களும்
அவனை கிளர்ச்சியடையச் செய்வதில்லை.
நீண்ட நேரம் அடக்கி வைத்துக்கொண்டிருந்து
சாவுகாசமாக கழிக்கும்
சிறுநீரின் சுகமே
அவனுக்கு போதுமாய் இருக்கின்றது.

-நளினி சங்கர்

நன்றி
பனிமுலை இலக்கிய இதழ்

அண்மைய இடுகைகள்