Monday, July 5, 2010

இரும்புக் கோட்டைமுரட்டு சிங்கம் – தமிழில் அரசியல் அங்கத சினிமாக்களின் துவக்கம்

என் அருமை நண்பர் ஜே.பியின் வலைப்பக்கத்தில் இந்திய கௌபாய் உலகம் என்ற தலைப்பில் இரும்புகோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தைப் பற்றிய கட்டுரையை படித்ததும் அதற்கு பின்னூட்டம் இடலாம் என தட்டச்சு செய்யத்துவங்கினேன். நான் தட்டச்சு செய்து முடித்திருந்த பொழுது பின்னூட்டம் ஒரு கட்டுரை அளவு நீண்டு சென்றுவிட்டதால் அதை ஒரு தனிப்பதிவாகவே நம் வலைப்பக்கத்தில் சேர்த்தால் என்ன என தோன்றியது. அதன் விளைவே இக்கட்டுரை. இந்த கட்டுரையினை நண்பர் ஜே.பி யின் கட்டுரைக்கு எதிர்வினையாக கருதாமல் அதன் தொடர்ச்சியான ஒன்றாகவும் அதில் விடுபட்டவைகளை சேர்க்க முயலும் பதிவாகவுமே கருதுகின்றேன். இனி கட்டுரைக்கு;


நண்பரின் கட்டுரையில் ‘’கெளபாய் படங்களில் வருகிற ஒரு தெனாவெட்டான, ரொமான்டிக்கான அதிரடிகள் இந்தப் படத்தில் இல்லை. காமெடியாக சொல்ல கெளபாய் படம் எடுத்திருக்க தேவை இல்லை’’. என குறிப்பிட்டிருந்தார். அதாவது இ.மு.கோ.சி திரைப்படத்தை ஒரு நல்ல கௌபாய் திரைப்படமாக எடுக்கப்படவில்லை என்கிற ஆதங்க தொணியுடன் அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கௌபாய் திரைப்படங்கள் என்பது அமெரிக்க சினிமா ஆரம்பித்து வைத்த ஒன்று. சிம்புத்தேவனின் நோக்கம் அமெரிக்க அரசியலுடன் அமெரிக்க சினிமாவையும் சேர்த்து கிண்டலடித்து ஒரு ஜனரஞ்சகசினிமாவினை கொடுப்பதுதான் என்றே எனக்கு படுகின்றது. அமெரிக்க கௌபாய் சினிமாக்களின் அதிமுக்கியமான கதாநாயகனான Clint East Wood-யின் பெயரையே இ.கோ.மு.சிங்கத்தின் வில்லன் கதாபாத்திரத்தின் பெயராக தமிழில் கிழக்குக் கட்டை (east wood) என வைத்திருப்பது. வில்லனின் இருப்பிடத்துக்கு உசாபுரம்(USApuram)என வைத்திருப்பது, உசாபுரத்தின் அணுகுண்டு ஒப்பந்தம் போன்றவைகள் இதை நிரூபிப்பதாக உள்ளது.
ஜே.பி குறிப்பிட்டிருந்தது போலவே கதாநாயகன் லாரன்ஸின் முகபாவங்களும், டப்பிங்கில் voice modulation என்கிற பெயரில் செய்திருக்கும் சேட்டைகளும், வயித்தெரிச்சலை ஏற்படுத்தும் அவரின் நடிப்பும் படத்தின் மாபெரும் பலவீனமாகவே தோன்றுகின்றது. இத்திரைப்படத்தில் முதலில் பார்த்திபன் நடிப்பதாக இருந்ததாம். பார்த்திபனின் நடிப்பு இக்கதாப்பாத்திரத்திற்கு கச்சிதாமாகவே இருந்திருக்கும். ஜே.பி குறிப்பிட்டிருப்பது போல் பிரபுதேவாவும், விஜய்யும் இன்னும் opt-ஆன நடிகர்கள். ஆனால் தமிழ் சினிமா தற்போது இருக்கும் சூழலில் இதெல்லாம் நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. தொடர்ச்சியாக சுறா போன்ற பார்முலா குப்பைகளில் நடித்து எத்தனை முறையென்றாலும் விஜய் தோற்கத் தயாராக இருக்கின்றார். ஆனால் அவ்வப்போதாவது இது போன்ற பரிச்சார்த்த முயற்சி படங்களில் நடிப்பது மட்டும் இன்னும் அவருக்கு அலர்ஜியாகவே இருந்து வருகின்றது. விஜய் என்கிற அசாதாரணமான நடிப்பு திறமை உள்ள நடிகருக்கு மிக முக்கியமான எதிரிகளாக நான் கருதுவது அவருடைய எதிர்கால கனவாக இருந்து வரும் அரசியல்வாதி விஜய்யும், இயக்குநர்கள் என்கிற போர்வையில் அவரை சுற்றி இருக்கும் அல்ல கைகளும், முக்கியமாக அவரின் தந்தையார் சந்திரசேகரும் தான். விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்து நம்மை காப்பாற்றுவதை விட இந்த படத்தில் நடித்து லாரன்சின் இம்சையிலிருந்தாவது நம்மை காப்பாற்றியிருக்கலாம்.

சமகால அரசியல் மீதான விமர்சனங்களை முன்வைக்கும் சினிமாக்கள் தமிழில் மிகக்குறைவே. அந்த வகையில் சிம்புத்தேவனின் அரசியல் அறிவும் அதைக்கொண்டு அவர் உருவாக்கி இருக்கும் அங்கத சினிமாக்களும் என்னை ஆச்சர்யபடுத்துகின்றது. இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியில் பெப்சி, கொக்கோகோலா, கிரிக்கெட், அரசாங்க அதிகாரிகள், சாதிச்சண்டை, தமிழ் சினிமா உருவாக்கம் என பல்வேறு சங்கதிகளை பகடி செய்திருப்பார். நான் இம்சை அரசன் திரைப்படம் வெளியாகி சில மாதங்களில் மைசூர் செல்ல வேண்டியிருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து மைசூரை சுற்றிப்பார்த்தபோதுதான் இம்சை அரசன் திரைப்படத்தின் உண்மையான அரசியலை புரிந்து கொள்ள முடிந்தது. வெள்ளைக்காரர்களுக்கு கூஜா தூக்கிக்கொண்டிருந்த அரசவம்சங்களின் வரலாறுகளே அங்கு அதிகமாக போற்றப்படுகின்றது. அவர்கள் வெள்ளைக்காரர்களுடன் உணவருந்தியது, விழாக்களில் கலந்து கொண்டது, அவர்கள் பயன்படுத்திய ஆடைகள், அணிகலன்கள் போன்றவற்றை நேரில் பார்த்தபோதுதான் இம்சை அரசர்களின் உண்மையான பின்புலத்தினையும், கர்நாடகாவில் இப்படத்தை வெளியிட எதிர்ப்புகுரல் எழுந்ததற்கான காரணத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. இவை அனைத்திற்கும் மாறாக வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு உயிர் துறந்த மாவீரர் திப்புசுல்தானின் வரலாற்றினை ஆவணப்படுத்தப்பட்டிருந்த விதம் வேதனையாக இருந்தது. கூஜா தூக்கிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் ஏன் உண்மையான போராளிக்கு கொடுக்கப்படவில்லை. இவை அனைத்திற்கும் ‘’வரலாறு முக்கியம் அமைச்சரே’’ என்கிற சிம்புத்தேவனின் வசனம்தான் பதில். இன்றைய நம் தமிழகத்து இம்சை அரசர்களும் இத்தத்துவத்தை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள் என்பதை கடந்த 4-ஆண்டு கால தமிழக நிகழ்வுகள் உறுதிசெய்கின்றன.
இதன் தொடர்ச்சியாக, இ.அ.23 புலிகேசியில் அங்கங்கே தெளிக்கப்பட்டிருந்த அமெரிக்க எதிர்ப்பு அரசியல் இ.மு.கோ.சி படத்தின் பிரதான அரசியலாக உள்ளது. இன்னும் தெளிவாக சொன்னால் இ.கோ.மு சி ஒரு அமெரிக்க எதிர்ப்பு சினிமா எனலாம். அமெரிக்காவின் 123 ஒப்பந்தம் பற்றிய அங்கதம் குறிப்பிடத்தக்க ஒன்று, 25 ஆண்டு காலம் கழித்தும் (போபால் விஷவாயு கசிவால்) பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க நாதியற்ற ஒரு சமூக சூழலில், அரசின் அடுத்த இலக்கு அணுக்கரு உலை. அதிலும் மத்திய அரசு நிறைவேற்ற துடித்துக் கொண்டிருக்கும் அணுக்கரு உலை தொடர்பான விபத்துக் காப்பீடு மசோதா மிகவும் நகைச்சுவையான ஒன்று. ஏற்கனவே மாபெரும் நகைச்சுவையான ஒன்றினை பகடி செய்வது மிகவும் கடினமான ஒன்று. சிம்புத்தேவன் அதை சாதாரண பார்வையாளனுக்கும் எளிமையாக புரியும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் வரும் தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்ற கேள்வியின் போது திரையரங்கத்தில் இருந்த பலர் கைத்தட்டி சிரித்தாலும் அந்த புதையல் கண்டுபிடிப்பில் பங்கேற்ற கதாபாத்திரங்களைப் போலவே ஏராளமான பார்வையாளர்கள் தவறான எண்ணிக்கையை மனதிற்குள் கூறியவாறு போலியாக சிரித்துக்கொண்டிருந்தார்கள் என்பதை எளிதாக உணரமுடிந்தது. ''பொங்கு தமிழர்க்கு இன்னல் நேர்ந்தால் என்ன செய்வோம்'' என்கிற கேள்வியும், ''ஆளவந்தான் யார்'' என்கிற கேள்வியும் அரசியல் பகடிகளின் உச்சம் எனலாம். இந்த திரைப்படம் வெறும் கௌபாய் திரைப்படமாக கருதப்படாமல் அரசியல் அங்கத சினிமா வகையறாகவே கருதப்படவேண்டும். அதற்கான வெற்றிடங்களே இங்கு அதிகம் இருப்பதாகவும் உணர்கிறேன்.
சமகால பிரச்சனைகளை பேச முயலும் எந்த ஒரு படைப்பும், படைப்பாளியும் நிச்சயம் போற்றப்படவேண்டும். தமிழ் சினிமாத்துறையிலிருந்து இப்படி ஒரு குரல் ஒலித்திருப்பது ஒரு நல்ல துவக்கம். அந்த வகையில் சிம்புத்தேவனின் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் ஒரு நல்ல சினிமாவுக்கான முயற்சியே. இருப்பினும் இப்படி ஒரு சினிமாவினை உருவாக்க சிம்புத்தேவனுக்கு மூன்று கதாநாயகிகளும், சில கவர்ச்சிப்பாடல்களும் தேவைப்படுவது வருத்தம் அளிக்கின்றது.

குறிப்பு
இப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் சமீபத்திய தயாரிப்புகள் நான் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், மதராச பட்டினம், யுத்தம் செய், அவன் இவன்... இந்த பட்டியல் AGS production company-யின் மீது மிகுந்த மரியாதையினையும், நம்பிக்கையினையும், எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

7 comments:

கம்ப்யூட்டர் மெக்கானிக்... said...
This comment has been removed by the author.
கம்ப்யூட்டர் மெக்கானிக்... said...
This comment has been removed by the author.
கம்ப்யூட்டர் மெக்கானிக்... said...

இப்போதெல்லாம் மக்கள் உணவிலும் திரையரங்குகளிலும் மசாலாவையே எதிர்பார்க்கிறார்கள். சிம்புதேவன அவருடைய கருத்தினை சொல்ல நகைச்சுவை மற்றும் சில பல technique-க்குகளை பயன்படுத்தி உள்ளார். அந்த வகையில் இப்படத்தின் அரசியல் கோணத்தை சொன்னதற்கு நன்றி!

நளினி சங்கர் said...

தங்கள் வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி கம்ப்யூட்டர் மெக்கானிக். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களை நீங்கள் குறைத்து மதிப்பிடுதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

Jayaprakashvel said...

சங்கர்
நீங்கள் இந்தப் படத்தை மிகவும் பொறுப்பாகப் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்கிற அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அங்கதத் தொனி போன்றவை ஒத்துக் கொள்ளக் கூடியவை தான். ஆனாலும் தீவிரமான கெளபாய் பட ரசிகனான எனக்கு இந்தப் படம் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. உங்களின் இந்தப் பதிவு குறித்து நேரில் சந்திக்கும் போது நிறைய பேசுவோம்.ஆனால் அது பின்வருவனவற்றின் விரிவாகத்தான் இருக்கும் அமேரிக்க எதிர்ப்பு என்பதை சிம்புதேவன் எங்காவது பேட்டிகளில் சொல்லி இருக்கிறாரா? சொல்லி இருந்தால் சரி. இல்லாவிட்டால் இதுவும் ஒரு வியாபார தந்திரமே. குட்டி ரேவதி குறித்த வசனத்திற்கு முகம் காட்ட மறுத்த ஓடி ஒளிந்த எஸ். ராமகிருஷ்ணனின் நேர்மைக்குறைவு- மாடு செத்தா மனுசன் தின்னான் என்ற வரிகளை மாற்ற மறுத்த இயக்குனரின் (பெயர் தெரியவில்லை) நேர்மை இரண்டும் இங்கே எனக்கு நினைவுக்கு வருகிறது.
அப்புறம் அங்கதச்சுவை. இது முதல் படமா என்பது எனக்குத்தெரியவில்லை. அப்படி இருந்தால் மிக மகிழ்ச்சி.
ஆனால் எந்த சூழ்னிலையிலும் சிம்புதேவனை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மிகவும் மதிக்கப்படவேண்டிய இயக்குனர்.

மைசூர் மகாராஜா அரண்மனையையும் திப்புவின் சிதைந்த கோட்டைகளையும் ஒரே நாளில் பார்க்க நேர்ந்த எனக்கு தோன்றிய அதே உணர்வு உங்களுக்கும் தோன்றி இருப்பது மிகவும் மகிழ்ச்சி. அதை பற்றி எழுத வேண்டும் என நினைப்பு ரொம்ப நாளாக உண்டு. கடந்த மாதம் மீண்டுமொரு முறை மைசூரு சென்ற போதும் உங்களின் கட்டுரைக்குப் பின்னாலும் அது மிகவும் தீவிரம் கொண்டுள்ளது. விரைவில் எழுத வேண்டும்.

Jayaprakashvel said...

மைசூர் மகாராஜா அரண்மனையையும் திப்புவின் சிதைந்த கோட்டைகளையும் ஒரே நாளில் பார்க்க நேர்ந்த எனக்கு தோன்றிய அதே உணர்வு உங்களுக்கும் தோன்றி இருப்பது மிகவும் மகிழ்ச்சி. அதை பற்றி எழுத வேண்டும் என நினைப்பு ரொம்ப நாளாக உண்டு. கடந்த மாதம் மீண்டுமொரு முறை மைசூரு சென்ற போதும் உங்களின் கட்டுரைக்குப் பின்னாலும் அது மிகவும் தீவிரம் கொண்டுள்ளது. விரைவில் எழுத வேண்டும்.

Jayaprakashvel said...

சங்கர்
நீங்கள் இந்தப் படத்தை மிகவும் பொறுப்பாகப் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்கிற அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அங்கதத் தொனி போன்றவை ஒத்துக் கொள்ளக் கூடியவை தான். ஆனாலும் தீவிரமான கெளபாய் பட ரசிகனான எனக்கு இந்தப் படம் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. உங்களின் இந்தப் பதிவு குறித்து நேரில் சந்திக்கும் போது நிறைய பேசுவோம்.ஆனால் அது பின்வருவனவற்றின் விரிவாகத்தான் இருக்கும் அமேரிக்க எதிர்ப்பு என்பதை சிம்புதேவன் எங்காவது பேட்டிகளில் சொல்லி இருக்கிறாரா? சொல்லி இருந்தால் சரி. இல்லாவிட்டால் இதுவும் ஒரு வியாபார தந்திரமே. குட்டி ரேவதி குறித்த வசனத்திற்கு முகம் காட்ட மறுத்த ஓடி ஒளிந்த எஸ். ராமகிருஷ்ணனின் நேர்மைக்குறைவு- மாடு செத்தா மனுசன் தின்னான் என்ற வரிகளை மாற்ற மறுத்த இயக்குனரின் (பெயர் தெரியவில்லை) நேர்மை இரண்டும் இங்கே எனக்கு நினைவுக்கு வருகிறது.
அப்புறம் அங்கதச்சுவை. இது முதல் படமா என்பது எனக்குத்தெரியவில்லை. அப்படி இருந்தால் மிக மகிழ்ச்சி.
ஆனால் எந்த சூழ்னிலையிலும் சிம்புதேவனை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மிகவும் மதிக்கப்படவேண்டிய இயக்குனர்.

அண்மைய இடுகைகள்