Thursday, April 8, 2010

பேராண்மை



மருத்துவப்பரிசோதனைக்காக மனித உயிர்கள் எலியைப் போல பயன்படுத்தப்படுகிறார்கள் என ‘ஈ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா சூழலில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததால், எஸ். பி. ஜனநாதனின் பேராண்மை படத்திற்கு சற்று கூடுதல் எதிர்பார்ப்புடனே சென்றேன்.
ரஷ்ய நாவல் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டிருதாக இயக்குநர் கூறியிருந்ததும் நம் கூடுதல் எதிப்பார்ப்பிற்கு ஒரு காரணம். படத்தின் துவக்கக்காட்சியாக வரும் செயற்கைக்கோள் ஏவுதளம், ஆய்வுக்கூடம் போன்றவை அதை ஆமோதிப்பது போலவே இருந்தது. ஆனால் அதற்கு அடுத்து வரும் கதாநாயகனின் அறிமுகக்காட்சி நம் எதிர்பார்ப்பு தவறோ என்ற ஒரு சிறிய பயத்தை ஏற்படுத்தியது. காட்டிலிருந்து தப்பித்து ஊருக்குள் புகுந்த புலி ஒன்று ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டு ஊரையே ஸ்தம்பிக்கவைக்கின்றது. புலி ஊருக்குள் எப்போது வருமோ! அடுத்து யாருக்கு என்ன ஆகுமோ என ஊர் மக்கள் கவலையில் இருக்கும்போது, அந்த புலியை கொன்று கட்டி இழுத்து வருகிறார் கதாநாயகன். அடுத்து கதாநாயகனின் சாதனையை போற்றும் (ஒரு சதவீதம் கூட மனதில் தங்காத) ஒரு பாடல் என வணிக சினிமாவின் அலுத்துப்போன formula-வில் படம் நகரத்துவங்கியதால் எனக்கு மேலும் பயம் சற்று அதிகமானது. படத்தின் இடைவேளை வரை இந்த பயம் அடிக்கடி எட்டிப் பார்த்துக்கொண்டேதான் இருந்தது.
இத்திரைப்படத்தைப் பற்றிய பத்திரிக்கைச் செய்திகள், முன்னோட்டங்கள், இயக்குநரின் நேர்காணல்கள் போன்றவை ‘பேராண்மை’ காடு, இயற்கை வளங்கள் போன்றவற்றின் மீதான அக்கரையைப் பேசப்போகின்ற படமோ! என்ற தோற்றத்தை உருவாக்கியிருந்தது. ஒரு வேளை இது என் தனிப்பட்ட observation-ஆக கூட இருக்கலாம்.
படத்தின் முதல் காட்சியில் வரும் செயற்கைக்கோள் ஏவப்படப்போவது பற்றிய விஞ்ஞானியின் பேட்டியிலிருந்து ஒரு சாதாரண பார்வையாளனும் கூட படத்தின் கதையை யூகித்துவிடலாம். செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டு விட்டால் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்பதால் அதனை தடுப்பதற்காக வெளிநாட்டிலிருந்து கூலிப்படையினர் வரவழைக்கப்படுகின்றனர். இந்த திட்டத்திற்காக ஏவுதளம் அமைந்துள்ள காட்டில் கூலிப்படையினர் தஞ்சம் புகுகின்றனர். அதே காட்டிற்கு வேறு ஒரு பயிற்சிக்காக வரும் 5 மாணவிகளின் உதவியுடன் எப்படி கதாநாயகன் செயற்கைகோளை காப்பாற்றி இந்தியாவை வல்லரசு ஆக்குகிறார் என்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை.

‘நெய்தல்’-லின் முதல் இரண்டு இதழ்களில் 5 பக்க அளவு அறிவியல் கட்டுரை எழுதும் அளவுக்கு ‘ஈ’ படத்தின் மூலம் நம் கவனத்தை ஈர்த்த ஜனநாதன் படம்தானா இது? என்ற ஒரு சந்தேகத்தையே படத்தின் முதல்பாதி ஏற்படுத்தி இருந்தது. இருந்தும் இப்படத்தைப்பற்றி இங்கு நாம் விவாதிக்கக் காரணம் இப்படத்தின் இரண்டாம் பகுதியே. 5 பக்க அறிவியல் கட்டுரை எழுதவைக்கும் அளவுக்கு இல்லை என்றாலும் இப்படத்தின் இரண்டாம் பாதியை மட்டும் முன்னிலைப்படுத்தி நாம் விவாதிக்க நிறைய செய்திகள் இப்படத்தில் உள்ளன. இப்படத்தின் இரண்டாம் பாதி முழுக்கவே ஒரு கிளைமாக்ஸ் காட்சியைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. தமிழ் சினிமா பார்வையாளனுக்கு இது முற்றிலும் வித்தியாசமான ஒரு அனுபவம். இது இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆகியோரின் உழைப்புக்கான அங்கீகாரம். இந்த இருவருக்குமான புரிதலே இப்படத்தின் மாபெரும் பலமாக கருதுகிறேன். தொழில்நுட்பரீதியாக (பின்னனி இசையை தவிர்த்து) இத்திரைப்படம் இந்திய சினிமாக்களுக்கு ஒரு மாபெரும் சவால் எனலாம். இப்படத்தைப்பற்றிய நண்பர்களுடான விவாதங்களின் போது இதில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் பற்றி இதுவரை ஒருவரும் விவாதிக்கவில்லை. ‘’அத்தியாவசிமான காட்சிகளில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்போது தொழில்நுட்பம் மறக்கடிக்கப்பட்டு காட்சிகளில் பார்வையாளனை ஒன்றச்செய்வது ஒரு சிறந்த படைப்பாளிக்கு சாத்தியமே’’ என்பதை இப்படத்தின் தொழில்நுட்பக்குழுவினர் நிறுபித்து இருக்கின்றனர். ஏனோ இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் சினிமாவின் மாமேதை ‘இயக்குநர் சங்கரின்’ முகம் என் நினைவுக்கு வந்து செல்கின்றது.
தமிழ் சினிமாவில் எஸ்.பி.ஜனநாதனின் தனித்துவம் என்பது அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களமே. அவருடைய மூன்று திரைப்படங்களும் வெவ்வேறு விதமான கதைக்களம் கொண்டவை. முந்தைய இரண்டு படங்களை விட பேராண்மையின் கதைக்களம் முற்றிலும் புதுமையானது. அதனாலேயே ஒரு சாதாரண விஜயகாந்த் படத்தின் கதைப்போல் இப்படத்தின் கதை தோன்றினாலும், கதைக்களமும் அதன் பின்னனி பற்றிய ஆராய்ச்சியும், அதற்கான இயக்குநருடைய உழைப்பும் இப்படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றது. காடு பற்றிய இவ்வளவு விவரங்களுடன் எந்த திரைப்படமும் வந்ததில்லை. அடர்ந்த காடுகளுக்குள் காமிரா பயனித்து இருக்கும் விதம் முற்றிலும் வித்தியாசமானது. இடைவேளையின்போது வரும் ஒரு long shot- காட்சியே போதும். ஆற்றின் ஒரு கரையில் இருக்கும் கூலிப்படையினர், மறுகரையில் அவர்களின் திட்டங்களை தகர்க்கும் முனைப்புடன் இருக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகள் என அனைத்தையும் ஒரே frame-யில் கொண்டு வந்து இடைவேளை என சொல்லும் அந்த அற்புத shot-க்கு எழுந்து நின்று கை தட்ட வேண்டும் போல் இருந்தது.



இப்படத்தின் கதையை முதன்முதலில் ஜெயம் ரவிக்கு விவரித்தபோது அவருக்கு எதுமே புரியவில்லை என்றும் ஜனநாதனின் மீதுள்ள நம்பிக்கையில் மட்டுமே இத்திரைப்படத்தில் நடித்ததாகவும் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் மூலம் கேள்விப்பட்டேன். நான் இப்படத்தைப் பார்க்க சென்றிருந்தபோது எனக்கு பின்வரிசையில் அமர்ந்திருந்த 10 வயது சிறுமி மிகவும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகனின் உயர் அதிகாரி (பொன்வண்ணன்) தொலைபேசியில் மாவட்ட ஆட்சியரிடம் பேசும்போது “ Force-லாம் ஏதும் வேணாம் சார். நானே பார்த்துக்கிறன். என்னோட Force-யே போதும்” என அங்கு நடந்திருக்கும் அனைத்து தியாகங்களுக்கும், சாதனைகளுக்கும் அவரே காரணம் என்ற ரீதியில் பேசுவார். அப்போது அந்த பின்வரிசை சிறும் தன் அம்மாவிடம் “ஐ… அவர் (துருவன்) செஞ்ஜ எல்லாத்தையும் இவரே செஞ்ஜ மாரி சொல்றாரு” சங்கடத்துடன் குறைப்பட்டுக்கொண்டது. நான் திரும்பி ஒருமுறை அந்தச்சிறுமியைப் பார்த்துவிட்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். நான் சிரித்ததற்கு காரணம் அந்த சிறுமியின் வெகுளித்தனத்தினை கண்டு மட்டும் அல்ல. 10 வயது சிறுமிக்குப் புரியுக்கூடிய கதை, ஜனநாதன் விவரித்தபோது ஜெயம் ரவிக்கு எதனால் புரியாமல் போனது என்பதை நினைத்தும் கூட. இதுதான் பேராண்மை க்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக நினைக்கின்றேன். சாதாரண பார்வையாளனுக்கு குழப்பம் ஏற்படக்கூடிய பல காட்சிகளை மிக நேர்த்தியாகவும் எந்த சிக்கலும் இன்றி எளிமையாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதை சாத்தியப்படுத்தியது இப்படத்தின் ஒளிப்பதிவும், படத்தொகுப்புமே ஆகும். ஏனெனில், கதாப்பாத்திரங்களுக்கு நிகராக இக்கதை நடக்கும் காடுகளும் முக்கியத்துவம் பெறுவதால், கதாப்பாத்திரங்கள் இருக்கும் location பற்றிய குழப்பங்களை இப்படத்தின் கேமிரா கோணங்களே தவிர்த்து விடுகின்றது. Cell phone signals எதுவுமே இல்லாத ஒரு காட்டில் இது போன்ற shots-களை படம் பிடித்திருப்பது அசாதரணமானது.
தொடரும்…

No comments:

அண்மைய இடுகைகள்