Friday, May 22, 2009

பிரபாகரனின் மரணச்செய்தி

அன்புள்ள தோழி,

இது வரை ஈழத்தில் இருந்து வந்த உயிர் இழுப்புச்செய்திகள் நமக்கு ஏற்படுத்திய வலியைவிட பல மடங்கு வலியை இப்போது உணர்கிறோம் . பிரபாகரன் களத்தில் இருந்த வரை, நிகழ்ந்த அத்தனை உயிர் இழப்புகளுக்கும் எதோ ஒரு அர்த்தம் இருந்து வந்ததாகவே உணர்ந்துவந்தோம்.

ஓர் இரவு, நம் தொலைபேசி உரையாடலில் நீங்கள் எனக்கு சொன்ன கதை ஒன்றுதான் என் நினைவிற்கு வருகின்றது. ஒரு ஓவியர், உடல்நலமற்ற பெண், இலைகள் உதிர்ந்து காய்ந்துகொண்டு வரும் மரம் ஆகியவை பற்றிய கதை அது. அந்த கதையின் கடைசியில் வரும் ஒற்றை இலைதான் பிரபாகரன். இன்று அதுவும் உதிர்ந்துவிட்டது.



பிரபாகரனின் மரணச்செய்தி நாம் மிகவும் நேசிக்கும் ஒருவருடைய மரணத்தை விட சற்று கூடுதல் துக்கமான ஒன்று. அடுத்த தலைமுறைமீதான அதீத அக்கறை கொண்ட ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தின் அத்தனை போராட்டங்களும், முயற்சிகளும், தியாகங்களும் இன்று வீணாகிவிட்டது என்பதை நினைக்கும்போது துக்கம் பீறிடுகிறது.

"ஈழமக்களின் சார்பாக பிரபாகரன் கோரும் உரிமைகள் அனைத்தும் நியாயமாக இருப்பினும் அவர் அதை அடைய தேர்ந்தெடுத்த போராட்டவழிமுறைதான் தவறு..."

"அது எப்படி? தனி நாடு எல்லாம்?..."

"நம்ம இந்தியாவிலயும்தான் நிறைய போராட்ட அமைப்புகள் தனி நாடு கேக்குது. அதெல்லாம் அவங்க இஷ்டப்படி கொடுத்துட முடியுமா? வேணும்னா சம உரிமை கேக்கலாம்..."

" ராஜீவ் காந்தி-ய கொன்னது அவங்க செஞ்ச மிகபெரிய தப்பு..."
போன்ற விமர்சனங்கள் நிறைய அறிவு ஜீவிகளிடமிருந்து நம்மிடம் வந்த வண்ணம் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் நாம் சொல்வது ஒன்றுதான். நம் பக்கத்துக்கு வீட்டில் நடக்கும் வரை கற்பழிப்பு, கொலை போன்றவை வெறும் சம்பவங்களே! யார் வேண்டுமென்றாலும் கருத்து தெரிவிக்கலாம். தங்கள் பார்வை பற்றிய புத்திசாளித்தனத்தை நிரூபித்துக்கொள்ளலாம். 'மீண்டும் எப்போது தேர்தல் வரும்? ஒரு ஓட்டுக்கு எவ்வளவு பணம் கேட்டு பெறுவது' என்று கணக்கு போட்டு கொண்டு இருக்கலாம். 'டெல்லி சென்று இருக்கும் தமிழ் இ(ஈ)ன தலைவர் கருணாநிதி எத்தனை மந்திரிகளுடன் தமிழகம் திரும்புவர் ' (ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக எத்தனை முறை டெல்லி சென்றார்? நினைவில் இல்லை!) என்று பட்டிமன்றம் நடத்தலாம். அல்லது IPL cricket match பார்க்கலாம்.

இந்நிலையில், இது போன்ற அவதூறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் முட்டாள்களிடம் அதை மறுத்து பேசுவது, பிரபாகரன் இழப்பு ஈழத்தமிழர்களுக்கு நல்லதா? கேட்டதா? போன்ற விவாதங்களில் ஈடுபடுவது, போன்றவை பயனற்றது என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். அது நமக்கு மேலும் வருத்தத்தையே ஏற்படுத்தும். வெறும் அமைதி மட்டுமே நமக்கு ஆறுதல். ஆதலால் அமைதியை இருப்பதே உத்தமம்.

இந்த சூழலுக்கு மிகவும் பொருத்தமாய் இருக்கும் ஒரு பழைய பாடலின் வரிகள் எனக்கு ஆறுதல் சொல்கின்றது. இதோ உனக்கும் அந்த ஆறுதல்...

"ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா...
தாயகம் காப்பது கடமையடா...
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்...
மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்..."


இன்னும் நிறைய இருக்கிறது.
வருத்தத்துடன் ஷங்கர்.

No comments:

அண்மைய இடுகைகள்